விழுப்புரம்: திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்நகரத்தின் பரப்பளவு 22.33 சதுர கி.மீ. இந்நகரத்தில் 16,474 வீடுகளும் 2,756 வணிக வளாகங்களும் உள்ளன. இந்நகரத்தின் மக்கள் தொகை 2011-ம் ஆண்டின்படி 72,796 என கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
இந்நகரத் தின் தெருக்களின் நீளம் 174.50 கிலோ மீட்டராகும். நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு, நகராட்சியை தூய்மையாக வைத்திருக்கும் வகையில், கடந்த ஆட்சியில் பாதாளச் சாக்கடை பணி தொடங்க திட்டமிடப்பட்டது. இதற்காக, ரூ. 268 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
இதில், ஹட்கோ பங்களிப்பு ரூ.174 கோடியே 20 லட்சம், ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டம் ரூ.67 கோடி, நகராட்சி பங்களிப்பு ரூ.26 கோடியே 80 லட்சம் ஆகிய வகைகளின் கீழ் நிதி பெறப்பட்டு, செயல்படுத்த நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இத்திட்ட பணி களை கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி, அப்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.
2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 72,796 பேர் வசித்து வருவதாக கூறப் பட்டாலும், தற்போதுள்ள நிலையின்படி, உத்தேசமாக 84,087 பேர் பயன்பெறும் வகையில் திண்டிவனம் நகரில் இந்த பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. ஆட்சி மாற்றப்பட்ட நிலையில் இத்திட்டம், மறு ஆய்வு செய்யப்பட்டு, ரூ.295 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது, இதில் 77 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்தப் பணிகளை இந்தாண்டு நவம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்பது திட்ட இலக்கு.
மீறி பணியைத் தொடரும் பட்சத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு தண்டத் தொகை அரசால் விதிக்கப்படும். இதனால் அவசரஅவசரமாக பணிகள் நடந்து வருகின்றன. இதனால் சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை முழுமையாக மூடாமல் சென்று விடுகின்றனர். லேசான மழைக்கே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அவசரகதி பணியால் திண்டிவனம் நகர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இது குறித்து திண்டிவனத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கூறுகையில், “திண்டிவனம் நகரம் முழுவதும் பல தெருக்களில் தினமும் ஏதாவது ஒரு வாகனம் இப்படி சரியாக மூடாத பாதாளச் சாக்கடை பள்ளத்தில் மாட்டிக் கொள்கிறது. அதை கிரேன் மற்றும் ஜேசிபி உதவியுடன் வாகன உரிமையாளர்கள் மீட்பது வாடிக்கையாகி வருகிறது.
அண்மையில் பணியின் போது வடமாநில தொழிலாளர் ஒருவர் இக்குழிக்குள் சிக்கி உயிரிழந்துள்ளார்.முழுமையாக பணியை முடித்து, தோண்டியக் குழியை முறையாக மூடி, அதன் மேல் முறையான அழுத்தம் கொடுத்து சிமென்ட் போட்டு பேக்கிங் செய்யாமல் மேலோட்டமாக மூடி விட்டு சென்று விடுகின்றனர்.
அது ஈரம் பட்டவுடன் உள்வாங்கி, அதன் மேல் செல்லும் வாகனங்கள் சிக்கி நிற்பது வாடிக்கையாகி வருகிறது” என்றார். இதுபற்றி திண்டிவனம் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது அதற்கான சரியான பதில் இல்லை. ஒரு பணியை திட்டமிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்பது முக்கியம்; அதை விட முக்கியம் அதைச் சரியாக செய்வது. நீண்டகால கோரிக்கைக்குப் பின் திண்டிவனம் நகருக்கு வரும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை சரியாக செய்ய வேண்டும் என்பது இந்நகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.