சென்னை: திருநெல்வேலி அருகே கடலில் குளிக்கச் சென்று மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், கரைச்சுத்துப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (14), த/பெ.செல்வராஜ், ராகுல்கண்ணன் (14) , த/பெ.இசக்கியப்பன் மற்றும் முகேஷ் (13), த/பெ.மகாலிங்கம் ஆகிய மூன்று பள்ளி மாணவர்களும் நேற்று (ஆக.15) கடற்கரைக்கு குளிக்கச் சென்ற போது எதிர்பாராதவிதமாக கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, விடுமுறை நாளான நேற்று திருநெல்வேலி அருகே உள்ள நவ்வலடி கடற்கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், ராகுல் மற்றும் முகேஷ் ஆகிய மூன்று சிறுவர்கள் கடலுக்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அலையில் சிக்கிய மூன்று சிறுவர்களும் உயிரிழந்தனர்.
வெகுநேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால், சிறுவர்களின் பெற்றோர்கள் காவல்து றையில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து கடலில் மாயமான மூன்று சிறுவர்களையும் தேடும் பணியில் கடலோர காவல் படையினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில், புதன்கிழமை காலை மூன்று சிறுவர்களது உடலும் கரை ஒதுங்கியது. கடலில் குளிக்க சென்று மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.