சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (ஆக.16) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 77 டிகிரி முதல் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் சாத்தியாறு அணையில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில்இன்று மணிக்கு 40-65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுவீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.