தமிழகம்

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வசூலாகும் சுங்கக் கட்டணம் குறித்து தணிக்கை - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம் குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி கூடுதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது இந்திய தலைமை கணக்காயரின் தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. தென்மாநிலங்களில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் இருந்து ரூ.132 கோடிகூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட் டுள்ளது.

செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் சுங்கச்சாவடியை தினமும் சராசரியாக 1.20 லட்சம் ஊர்திகள் கடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு ஊர்திகள் செல்லும் இந்த சாலையில் ஒரு நாளைக்கு ரூ.11 லட்சம் மட்டுமே கட்டணமாக வசூலாவதாக கணக்கு காட்டப்பட்டால், அதில் எந்த அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றிருக்கும் என்பதை யூகித்துக் கொள்ள முடியும்.

மேலும், முதலீட்டுக்காக செலவிடப்பட்ட தொகை வட்டியுடன் சேர்ந்து ரூ.770 கோடியாக அதிகரித்து விட்டதாகவும், அதை ஈடு செய்ய இன்னும் ரூ.354 கோடி வசூலிக்கப்பட வேண்டும் என்று கணக்கு காட்டப்பட்டது. இவ்வாறு கணக்கு காட்டப்பட்டால், இந்தியாவில் ஒரு சாலைக்குகூட கற்பனைக்கு எட்டிய காலம் வரை, முதலீட்டை திரும்ப எடுக்க முடியாது.

சுங்கக்கட்டண கணக்கு என்பது வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். எனவே, பரனூர் முதல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்துதணிக்கை செய்ய வேண்டும். அதன்மூலம் முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளை அடையாளம் கண்டு அவற்றில் கட்டணத்தை நீக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT