காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுதந்திர தினமான நேற்று கருப்புக் கொடி ஏற்றினர். மேலும் கிராம சபைக் கூட்டத்தையும், பள்ளியில் நடைபெற்ற சுந்திரதின விழாவையும் புறக்கணித்தனர். இதன்படி இந்தப் போராட்டமானது 385-வது நாளாக நேற்றும் நீடித்தது.
இந்தக் காலகட்டங்களில் இதுவரை 6 முறை கிராம சபை கூட்டம் நடந்துள்ளது. இதில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றி வந்தனர்.
இந்நிலையில் ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தின கிராம சபைக் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் அறிவித்தனர்.
பள்ளிகளில் நடக்கும் சுதந்திர தின விழாவுக்கும் மாணவர்களை அனுப்பப்போவதில்லை என்றும் அறிவித்திருந்தனர். மேலும் வீட்டில் கருப்பு கொடி ஏற்றியும் பேரணியாக வந்தும் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.
அதன்படி ஏகனாபுரம் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தனர். அங்குள்ள அரசு பள்ளிக்கு மாணவர்களை அனுப்பாததால் சுதந்திர தின விழா மாணவர்கள் இல்லாமல் ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக பேரணியாக வந்து போராட்டம் நடத்துவதை மட்டும் கைவிட்டனர்.