இளையான்குடி: இளையான்குடி அருகேயுள்ள சாலைக் கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தர விட்டும், அதை நிறைவேற்ற வருவாய்த் துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் சாலைக் கிராமத்தில் பெரிய ஊருணி, ஐந்து வட்டக்கிணறு பகுதியில் 26 ஏக்கரில் நீர்நிலை புறம்போக்கு உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமித்து கடைகள், கட்சி அலுவலகம், பொதுக்கழிப்பறை, நூலகம், ஊராட்சி அலுவலகம், கிராம சேவை மையம், அங்கன்வாடி மையம், சமுதாயக்கூடம், கோயில் போன்றவை கட்டப்பட்டன.
சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆனால் வருவாய்த் துறையினர் ஒருசில கடைகளை மட்டும் அக்கற்றினர். அதேநேரம் 11 பேர் ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்தனர்.
அந்த மனுக்களை தள்ளுபடி செய்த அப்போதைய மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி ஆக்கிரமிப்பில் உள்ள அரசு கட்டிடங்கள் உட்பட 69 கட்டிடங்களை இடிக்க கடந்த பிப்ரவரி மாதம் இளையான்குடி வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து 13 பேர் சென்னை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு கூடுதல் தலைமை செயலரிடம் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர்.
விசாரணை செய்து சமீபத்தில் சீராய்வு மனுக்களை அரசு கூடுதல் தலைமை செயலர் தள்ளுபடி செய்தார். இதையடுத்து தாமதமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு இளையான்குடி வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கடந்த ஜூலை 19-ம் தேதி உத்தரவிட்டார். ஆனால் அதன் பின்பும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயாராக இல்லை. இதனால் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம் என்று கூறினார்.