தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே வீரமரசன்பேட்டையில் நேற்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியர் தீபக் ஜேக்கப். 
தமிழகம்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்க: கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை அரசு விநியோகம் செய்ய வேண்டும் என பேராவூரணி மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள 25 கிராமங்களில் நேற்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பூதலூர் அருகே வீரமரசன்பேட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் பங்கேற்றார். அப்போது, பொதுமக்களின் குறைகளை ஆட்சியர் கேட்டறிந்தார்.

பேராவூரணி பகுதியில் குருவிக்கரம்பை, மருங்கப்பள்ளம், நாடியம், வீரியங்கோட்டை, பள்ளத்துார், முடச்சிக்காடு, மணக்காடு, செருவாவிடுதி உள்ளிட்ட 25-க்கும் அதிகமான ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில், தேங்காய் விலை வீழ்ச்சி காரணமாக தென்னை விவசாயிகள் பாதிக்கப்படுவதால், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை அரசு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், ஏழை- எளிய மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக ஆளுநர் ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT