தூத்துக்குடி / கோவில்பட்டி: சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஆழ்வார் திருநகரி ஒன்றியம் மேல ஆத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கலந்துகொண்டார். மேல ஆத்தூர் பகுதியில் சாதி பெயர்களில் உள்ள 9 தெருக்களின் பெயர்களை மாற்ற கூட்டத்தில் ஆட்சியர் பரிந்துரை செய்தார். இதனை அனைவரும் ஏற்று, 9 தெருக்களின் பெயர்களும் உடனடியாக மாற்றப்பட்டன.
தொடர்ந்து கூட்டத்தில் ஆட்சியர் பேசும்போது, “சாதிகளின் பெயரில் உள்ள தெருக்களுக்கு தலைவர்களின் பெயர்கள், அப்துல் கலாம் போன்ற அறிவியலாளர்கள் பெயர்களை வைக்கலாம். நாங்குநேரியில் ஒரு தர்மசங்கடமான செயல் நடைபெற்றுள்ளது. நாம் மனிதத் தன்மையுடன் வாழ வேண்டும் என தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
அனைவரும் சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும். சாதி பெயர்களை நீக்கிவிட்டு சுதந்திர போராட்ட வீரர்களின் பெயரை சூட்டினால் தமிழ்நாட்டுக்கே மேலஆத்தூர் ஊராட்சி முன்னுதாரணமாக திகழும்” என்றார். பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்ம சக்தி, ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜனகர், மேல ஆத்தூர் ஊராட்சி தலைவர் ஏ.பி.சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் வேலன் தலைமை வகித்தார். கூட்டத்தில், வில்லிசேரி வருவாய் கிராமத்தில் சுமார் 800 ஏக்கர் நிலத்தில் எலுமிச்சை பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்த எலுமிச்சை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
வில்லிசேரி பாரம்பரிய விவசாய தோட்ட பயிரான எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.