திருவண்ணாமலை: செய்யாறு அருகே இளநீர்குன்றம் ஊராட்சியில் திட்டமிட்டபடி பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் கிராம சபை கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்தாமலும், கூட்டத்தில் பங்கேற்க தலைவர் உள்ளிட்டோர் புறக்கணித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த இளநீர் குன்றம் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டத்தை பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இக்கோரிக்கையை ஏற்று, சுழற்சி முறையில் நடத்தப்படும் எனவும், சுதந்திர தினத்தன்று பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரி அறிவித்தார். இது தொடர்பாக ஊராட்சி முழுவதும் நோட்டீஸ் மூலமாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் நேற்று கிராம சபை கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காலை 11 மணிஅளவில் மக்களும் தயாராக இருந்தனர். ஆனால், ஊராட்சி மன்றத் தலைவர் பலராமன், துணைத் தலைவர் சங்கீதா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் யாரும் வரவில்லை.
கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இடத்துக்கு வந்திருந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரி, குப்புசாமி ஆகியோர் தலைவர் உள்ளிட்டவர்கள் வராததால் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துவிட்டு புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் கிராம சபை கூட்டம், கிராம பகுதியில் நடைபெறும் என நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், அதிருப்தி அடைந்த பட்டியலின மக்கள், “எங்கள் பகுதியில் கிராம சபை கூட்டத்தை நடத்த தலைவர் உள்ளிட்டவர்கள் விரும்பவில்லை. இதற்கு, அதிகாரிகளும் துணையாக உள்ளனர். அதனால்தான், எங்கள் பகுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட கிராம சபை கூட்டத்தை நடத்தாமல் ரத்து செய்துள்ளனர்” என்றனர்.
இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்கிடையில், கிராம சபை கூட்டத்தை அரசு அறிவித்தபடி நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்காத ஊராட்சி செயலாளர் துலுக்கானம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஊரக வளர்ச்சித் துறை முடிவு செய்தது.
இதன் எதிரொலியாக கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. பின்னர், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்புடன் மாலை 4 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் பலராமன், துணைத் தலைவர் சங்கீதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஊராட்சி மன்ற உறுப்பினர் லட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது, காலையில் நடைபெறுவதாக அறிவித்த நேரத்தில் பங்கேற்காதது ஏன்? என தலைவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உடல்நிலை சரியில்லை என தலைவர் கூறினார். கூட்டத்தில், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற பொதுமக்கள் வலியுறுத்தினர்.