எனக்கு கிடைக்காத நித்யா யாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதால்தான் அவரை கொலை செய்தேன் என்று பெசன்ட் நகர் கடற்கரையில் இளம் பெண்ணை கொலை செய்த அவரது காதலன் ஏழுமலை போலீஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த விஜயகுமாரின் மகள் நித்யா (23). அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே மருத்துவமனையில் உள்ள கேன்டீனில் டீ மாஸ்டராக இருந்த ஏழுமலையும் நித்யாவும் காதலித்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவில் பெசன்ட் நகர் கடற்கரையில் வைத்து நித்யாவின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி ஏழுமலை கொலை செய்தார். திண்டிவனம் அருகே முன்னூர் கிராமத்தில் தலைமறைவாக இருந்த ஏழுமலையை, சாஸ்திரிநகர் காவல் துறை ஆய்வாளர் கிறிஸ்டில் ஜெய்ஸில் தலைமையிலான காவல் துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
காவல் துறையினரிடம் ஏழுமலை கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:
நானும் நித்யாவும் 3 ஆண்டுகளாக காதலித்தோம். இந்நிலையில் நித்யா வேறொருவருடன் பழகுவதை அறிந்தேன். என்னைத் தவிர வேறொருவருடன் பழகக்கூடாது என்று பலமுறை நித்யாவை எச்சரித்தேன். ஆனால் அவள் கேட்கவில்லை. இதனால் நித்யாவுக்கும், எனக்கும் பலமுறை சண்டை ஏற்பட்டது. அவளுக்காக நான் நிறைய செலவு செய்திருக்கிறேன். சிம் கார்டு கூட வாங்கி கொடுத்தேன். ஆனால் வேறொருவரின் தொடர்பு கிடைத்ததும் நித்யா என்னை ஒதுக்கத் தொடங்கினாள்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று இரவு பெசன்ட் நகர் கடற்கரையில் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் இருவரும் சந்தித்து பேசினோம். ராட்டினத்தின் அடியில் இருந்து பேசிக் கொண்டிருந்தபோது நான் வாங்கி கொடுத்த சிம் கார்டை என்னிடம் திருப்பி கொடுத்த நித்யா, “இனிமேல் என்னிடம் பேசாதே” என்றாள். ஏற்கெனவே ஆத்திரத்தில் இருந்தநான் அவளது பேச்சை கேட்டு மேலும் கோபம் அடைந்தேன்.
எனக்கு கிடைக்காத நித்யா யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று அவளது கழுத்தை பிடித்து எனது கால்களுக்கு இடையில் வைத்து நெரித்தேன். பின்னர் அவளது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கினேன். இரண்டே நிமிடத்தில் அவள் இறந்து விட்டாள். நாங்கள் கடற்கரையில் இருந்தபோது லேசான தூறல் மழை பெய்தது. இதனால் கூட்டம் அதிகமாக இல்லை. ஒன்றிரண்டு பேர் மட்டுமே நடமாடினர். நாங்கள் அமர்ந்திருந்த இடம் இருட்டாக இருந்ததால் கொலை நடந்தது யாருக்கும் தெரியவில்லை. கொலை செய்த பின்னர் நித்யாவின் உடலை பார்த்து பயம் ஏற்பட்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திண்டிவனத்தில் உள்ள எனது கிராமத்திற்கு வந்து விட்டேன். போலீஸார் என்னை பிடித்துவிட்டனர்.
இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.