ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது நடந்த வன்முறை குறித்த விசாரணை இன்னும் நீடிக்கிறது. இந்த விசாரணைக் காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், இந்த வன்முறை தொடர்பாக, ஐ.பி.எஸ். அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும் என்று ஜல்லிக்கட்டுப் போராட்ட விசாரணை ஆணையத் தலைவரும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியுமான ராஜேஸ்வரன் கோவையில் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என சென்னை மெரீனா மற்றும் தமிழகம் முழுவதும் பல ஊர்களில் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தின் நிறைவில்... திடீரென வன்முறை ஏற்பட்டது. இதுகுறித்து நீதி விசாரணை தேவை என எதிர்க்கட்சிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரனைக் கொண்டு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்து வரும் ராஜேஸ்வரன், இன்று கோவைக்கு வந்தார். கோவை அரசினர் ஆய்வு மாளிகையில் பத்திரிகையாளர்களிடம், ‘ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது நடந்த வன்முறை தொடர்பாக இன்னும் விசாரணைகள் நடத்த வேண்டியிருக்கிறது. எனவே காலநீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் வன்முறை குறித்து ஐ.பி.எஸ். அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.