ஈரோட்டில் இயந்திரம் மூலம் நடக்கும் நெல் அறுவடைப் பணி 
தமிழகம்

கொடிவேரி பாசனப்பகுதியில் 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் இம்மாத இறுதியில் அறுவடைக்கு வரவுள்ளது

எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: கொடிவேரி பாசனப்பகுதியில் 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல், இம்மாத இறுதியில், அறுவடைக்கு வரவுள்ளது. இதை கொள்முதல் செய்ய தேவையான மையங்களை அமைப்பதில் பல்வேறு சவால்கள் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

ஈரோடு மாவட்டம் கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தில், நெல் பயிரிடப்பட்டுள்ளது. தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் கொடிவேரி பகுதியில், இம்மாத இறுதியில் அறுவடை தொடங்கவுள்ளது.

இதற்காக, நெல் கொள்முதல் மையங்களைத் தொடங்குவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம். முதல்கட்டமாக, விவசாயிகளின் கோரிக்கை மற்றும் வேளாண்மைத்துறை பரிந்துரைகளின் அடிப்படையில், எத்தனை இடங்களில் நெல் கொள்முதல் மையங்களை அமைக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும்.

அங்கு விசாலமான இடத்தை தேர்வு செய்து அதனை சுத்தப்படுத்துதல், தற்காலிக பணியாளர்களை பணியமர்த்துதல், அவர்களுக்கு பயிற்சியளித்தல், கொள்முதலுக்கு தேவையான பொருட்களை தயார் செய்தல், நெல்லில் இருந்து பதர்நீக்கும் இயந்திரங்களை கொண்டு வந்து அது இயங்கும் நிலையில் உள்ளதா என சோதனை செய்தல், கிடங்குகளுக்கு நெல்லை எடுத்துச் செல்ல ஒப்பந்த அடிப்படையில் லாரிகளை ஏற்பாடு செய்தல் என பல்வேறு பணிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இப்பணிகளை முன்கூட்டியே தொடங்கினால், தாமதமின்றி நெல் கொள்முதல் பணிகளை முடிக்க முடியும் என்கின்றனர் கொடிவேரி விவசாயிகள்.

இதுகுறித்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனசபைத் தலைவர் சுபி.தளபதி கூறியதாவது: கொடிவேரி பாசனப்பகுதியில் இம்மாத இறுதியில் அறுவடை தொடங்கவுள்ள நிலையில், நெல்கொள்முதல் மையம் அமைய தேவையான இடத்தை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும். தரமான கோணிப்பைகள் மற்றும் பழுது இல்லாத பதர் நீக்கும் இயந்திரங்களை தயார் செய்யாவிட்டால் அறுவடை தாமதமாகும்.

கடந்த இரு ஆண்டுகளாக, நெல் மூட்டை ஏற்றும் பணியில் 60 சதவீதம் வடமாநில தொழிலாளர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு அரசு ஒரு மூட்டைக்கு ரூ.9 மட்டும் கூலியாக கொடுக்கிறது. அவர்களுக்கு கூடுதல் கூலி கொடுத்தல், இதர செலவுகளுக்கு விவசாயிகளிடம் இருந்து ஒரு மூட்டைக்கு ரூ.25 வீதம் அதிகாரிகள் பெற்று வருகின்றனர். இந்த ஆண்டும் இது தொடர அனுமதிக்கக் கூடாது.

கொள்முதல் மையத்துக்கு வரும் நெல் மழையில் நனையாமல் பாதுகாக்க, தார்பாலின் வாங்க, முதல் வேளாண்மை பட்ஜெட்டில் ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், எங்கள் பகுதிக்கு இதுவரை ஒரு தார்பாலின் கூட வரவில்லை. மழையில் நனைவதால் நெல்லின் ஈரப்பதம் அதிகரிப்பதோடு அதன் தரமும் பாதிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே, பொது விநியோகத்திட்டத்தில் ரேஷன்கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமில்லாமல், துர்நாற்றத்துடன் இருக்கிறது. எனவே, பாதுகாப்பாக நெல் கொள்முதல் செய்ய நிரந்தரமான இடங்களை அரசு தேர்வு செய்வது மிக முக்கியமாகும்.

நெல்லை உலர்த்தி, பதர் நீக்கும் நவீன இயந்திரங்களை அரசு வாங்கி பயன்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் வாடகை அடிப்படையில் இதனை வாங்கி பயன்படுத்தினால், சரியான ஈரப்பதத்துடன் தரமான நெல்லை கொள்முதல் செய்ய முடியும்.

ஈரோடு மாவட்டத்தில் 45 அரிசி ஆலைகளுடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நெல் கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை கிடங்குக்கு அனுப்பி இருப்பு வைக்காமல், நேரடியாக ஆலைக்கு எடுத்துச் சென்று அரிசியாக மாற்றி இருப்பு வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் நடைமுறை செலவு குறையும், என்றார்.

31 இடங்களில் அமைக்க கோரிக்கை: கொடிவேரி பாசனசபை சார்பில், 31 இடங்களில் நெல் கொள்முதல் மையங்களை திறக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நஞ்சகவுண்டன் பாளையம், புது வள்ளியாம்பாளையத்தில் தலா 4 இடங்கள், புதுக்கரைபுதூரில் 3 இடங்கள், கள்ளிப்பட்டி, நஞ்சை புளியம்பட்டி, காசிபாளையம், கூகலூர், கருங்கரடு, சவண்டப்பூர், மேவானி ஆகிய பகுதிகளில் தலா 2 இடங்களிலும், கொண்டையாம்பாளையம், தூக்கநாயக்கன் பாளையம், ஏலூர், நஞ்சைதுறையாம்பாளையம், பெருந்தலையூர், கரட்டடிபாளையம் ஆகிய இடங்களில் ஒரு மையமும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் மாநில அரசின் ஊக்கத்தொகை சேர்த்து தற்போது சன்னரகம் கிலோ ரூ.21.60-க்கும், மோட்டா ரகம் ரூ.21.30-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. மத்திய அரசு வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இந்த விலையை உயர்த்தி அறிவிக்கவுள்ளதால், அந்த விலைக்கே நெல் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

SCROLL FOR NEXT