சுதந்திர தினத்தையொட்டி தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தேசியக் கொடி ஏற்றுகிறார். இந்நிலையில் வண்ண விளக்குகளால் தலைமைச் செயலக கட்டிடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.படம்: ம.பிரபு 
தமிழகம்

77-வது சுதந்திர தின கொண்டாட்டம்: கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் இன்று கொடியேற்றுகிறார்

செய்திப்பிரிவு

சென்னை: இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி, இன்று காலை 9 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பல்வேறு விருதுகளை வழங்குகிறார்.

இந்தியாவின் 77–வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில், உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில், மூவர்ண தேசியக் கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் 3-வது முறையாக ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றுகிறார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க காலை 8.50 மணிக்கு கோட்டை கொத்தளம் வரும் முதல்வருக்கு, காவல்துறை அதிகாரிகளை தலைமைச் செயலர் அறிமுகப்படுத்தி வைப்பார். அதன்பின், காவல்துறையின் பல்வேறு படையினரின் அணிவகுப்பை முதல்வர் ஏற்பார். தொடர்ந்து, 9 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றுவார்.

கல்பனா சாவ்லா, கலாம் விருது: அதன்பின், வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, அப்துல்கலாம் விருது, மாநில நல்லாளுமைக்கான விருது, மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக செயல்பட்டவர்கள் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர், மருத்துவர், சிறந்த நிறுவனம்,தன்னார்வ நிறுவனம் போன்றவற்றுக்கு விருதுகளை வழங்குகிறார்.

மேலும், போதை ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கான பதக்கங்கள் இந்தாண்டு முதல்முறையாக சுதந்திர தின நிகழ்ச்சியில் முதல்வர் வழங்குகிறார். தகைசால் தமிழர் விருதை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு வழங்குகிறார்.

மேலும், சிறப்பாகச் செயல்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான முதல் 3 பரிசுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். அதன்பின், விருது, பரிசு, பதக்கங்களை பெற்றவர்களுடன் முதல்வர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு, தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்கிறார்.

சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு, நிகழ்ச்சி முடியும் வரை காமராஜர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளை பொதுமக்கள் பார்க்கும் வகையில் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில் 15 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமாகவும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT