மதுரை: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் பக்கத்துக்கு கடைக்காரரை சாட்சியாக விசாரிக்க கைதான காவல்துறையினர் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ல் சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேரை சிபிஐ கைது செய்தது.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த விசாரணையின் போது உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை அருகே எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வரும் பிரபு என்பவரை சாட்சியாக விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி தமிழரசி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரபு என்பவரை சாட்சியாக விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அதே விவகாரம் குறித்து ஸ்ரீதர் நேரடியாகவும், மற்ற 8 பேர் தரப்பில் வழக்கறிஞர்களும் வாதிட்டனர். சிபிஐ தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
பின்னர் பிரபுவை சாட்சியாக விசாரிக்க அனுமதி கோரும் மனு மீதான தீர்ப்பை ஆக. 21-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.