முதல்வர் அடிக்கல் நாட்டி 2 மாதங்களாகியும் கட்டுமானப் பணி தொடங்கப்படாத மேட்டூர் பேருந்து நிலையம். 
தமிழகம்

முதல்வர் அடிக்கல் நாட்டி 2 மாதங்களாகியும் மேட்டூரில் புதிய பேருந்து நிலைய பணி தொடங்காததால் அதிருப்தி

த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு, முதல்வர் அடிக்கல் நாட்டி 2 மாதங்களாகியும் கட்டுமானப் பணிகள் தொடங்காதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் 1992-ம் ஆண்டு கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளும், பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் மேட்டூரில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, ரூ.6.40 கோடியில் பேருந்து நிலையம் கட்டப்படவுள்ளது. மேலும், தற்போதைய பேருந்து நிலையத்தை இடிப்பதற்கான அனுமதி கடந்த மே 22-ம் தேதி கிடைத்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக 3 நாள் சுற்றுப் பயணமாக முதல்வர் ஸ்டாலின் சேலம் வந்தார். ஜூன்11-ம் தேதி நடந்த அரசு நிகழ்ச்சியில், மேட்டூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர், பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் கிடைக்காமல் நகராட்சி நிர்வாகம் தடுமாறியது. இதையடுத்து, மேட்டூர் பேருந்து நிலையத்துக்கு எதிரே மின்வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க, நகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் நேருவும், ஆட்சியர் கார் மேகமும் அறிவுறுத்தினர்.

ஆனால், மின்சார வாரியம் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. பின்னர், மேட்டூர் எம்எல்ஏவும் அனுமதிக்கான முயற்சியில் ஈடுபட்டார். நீண்ட இழுபறிக்குப் பிறகு, கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் வாரியம் அனுமதி வழங்கியதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, மின்வாரியம் அனுமதி வழங்கியும், தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகளை மேட்டூர் நகராட்சி நிர்வாகம் இதுவரை தொடங்கவில்லை.

மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளையும் அப்புறப்படுத்தாமல் உள்ளனர். குறிப்பாக, நகராட்சியில் நிதிப் பற்றாக்குறை நிலவுவதால் தான் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது என அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர். இதனிடையே, முதல்வர் அடிக்கல் நாட்டி 2 மாதங்களாகியும், மேட்டூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகம் தொடங்காதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகளை அடுத்த வாரம் தொடங்கவுள்ளோம். பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை வரும் ஓரிரு நாட்களில் ஒப்படைக்க அறிவுறுத்தியுள்ளோம். இதன் பின்னர் பழைய கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு, ஒரு மாதத்தில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்’ என்றனர்.

SCROLL FOR NEXT