பொன்கார்த்திக் குமார், ஜான் விக்டர் 
தமிழகம்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த புலனாய்வு அதிகாரி விருதுக்கு சென்னை போலீஸார் 2 பேர் தேர்வு

செய்திப்பிரிவு

சென்னை: மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த புலனாய்வு அதிகாரி விருதுக்கு அடையாறு காவல் துணை ஆணையர் ஆர்.பொன்கார்த்திக் குமார், சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் உதவி ஆணையர் எஸ்.ஜான்விக்டர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

துணை ஆணையர் பொன்கார்த்திக் குமார், 2018-ல் சேலம்மாவட்டம் ஆத்தூர் உட்கோட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்தபோது, 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலைசெய்த வழக்கில் திறமையாக புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியைக் கைது செய்துள்ளார். மேலும், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தந்துள்ளார்.

உதவி ஆணையர் ஜான் விக்டர், 2015-ல் சிபிசிஐடி கடத்தல்தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்தபோது, பெரவள்ளூர் காவல் நிலைய எல்லையில், 16 வயது சிறுமி காணாமல்போன வழக்கை திறம்பட விசாரணை செய்து, காணாமல்போன சிறுமியை ஒரே நாளில் கண்டுபிடித்து, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார்.

மேலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, முறையாக சாட்சிகளை ஆஜர் செய்து, வழக்கில்தொடர்புடைய 3 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஒரு குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், இரு குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பெற்றுத்தந்துள்ளார்.

இவ்வாறு சிறப்பாகப் பணிபுரிந்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த புலனாய்வு அதிகாரி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட 2 காவல்அதிகாரிகளையும், சென்னைகாவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டினார்.

SCROLL FOR NEXT