சென்னை: சுதந்திர தினத்தன்று கோட்டையில் முதல்வர் கொடி ஏற்றுவதால், பாதுகாப்புக் கருதி துறைமுகம் முதல் பெசன்ட் நகர் வரையிலான கடல் பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை உதவி இயக்குநர் அஜய் ஆனந்த், அனைத்து விசைப் படகு மற்றும் நாட்டுப் படகு உரிமையாளர் சங்கங்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆக.15-ம் தேதி சுதந்திர தினத்தில் தமிழக முதல்வர், புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைக்க உள்ளதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அதிகாலை 4 மணி முதல் 10 மணி வரை சென்னை துறைமுகம் முதல் பெசன்ட் நகர் வரையிலான கடல் பகுதியில், கரையில் இருந்து கடலுக்குள் 5 கடல் மைல் தொலைவு வரை மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்குறிப்பிட்ட பகுதியில் ஆக.15-ம் தேதி அதிகாலை 4 மணி முதல் 10 மணி வரை பாதுகாப்புக் கருதி மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன் வளத்துறையின் இந்த உத்தரவுக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை - செங்கை மீன்பிடித் தொழிற் சங்கப் (சிஐடியு) பொதுச் செயலாளர் ஆர்.லோகநாதன் கூறும்போது, "மீன் வளர்ச்சி, புயல், மழை போன்ற காரணங்களால், மீன்பிடித் தடையை நியாயப்படுத்தலாம். ஆனால், கொஞ்சம்கூட பொருத்தம் இல்லாமல், முதல்வர் கோட்டையில் கொடி ஏற்றும்போது, சென்னை மீனவர்கள் 5 கடல் நாட்டிகல் மைல் வரை மீன் பிடிக்கத் தடை விதிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. கடல் வழியே பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என்றால், கடலோரக் காவல் படை பலவீனமாகி விட்டதா என்ற கேள்வி எழுகிறது" என்றார்.
தென்னிந்திய மீனவர் நலச் சங்கத் தலைவர் கு.பாரதி கூறும்போது, "மும்பையில் தீவிரவாதிகள் கடல்வழியாக வந்து தாக்குதல் நடத்திய சம்பவத்துக்குப் பிறகு, தமிழகத்துக்கு பிரதமர், ஜனாதிபதி போன்ற விஐபி-க்கள் வந்தால், பாதுகாப்பு கருதி மீன்பிடிக்கத் தடை விதிப்பது வழக்கமாகி விட்டது.
வி.ஐ.பி-க்கள் விமானம் மூலம் வந்து சென்றாலும் கூட, கடல் பகுதியில் மீன்பிடிக்க தேவையின்றித் தடை விதிக்கப்படுகிறது. அதிகாலையில் தான் மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்குச் செல்கின்றனர். அந்த நேரத்தில் தடை விதிப்பது, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். எனவே, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண தமிழக அரசும், மீன்வளத் துறையும் முன்வர வேண்டும்" என்றார்.