தமிழகம்

ஆவடியில் பீரங்கிகளின் செயல் விளக்க காட்சி - பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கண்டு ரசித்தனர்

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: ஆவடி கனரக வாகன தொழிற்சாலை வளாகத்தில் உள்நாட்டுஉதிரி பாகங்களால் தயாரிக்கப்பட்ட பீரங்கிகளின் கண்காட்சி மற்றும் செயல் விளக்கக் காட்சி நடைபெற்றது. இதை ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் கனரக வாகன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையில், ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் மூலம் உள்நாட்டு உதிரி பாகங்களை கொண்டு டி -90 பீஷ்மா, டி-72 அஜேயா, பி.எல்.டி ஆகிய பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தின் அமிர்த விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் ஆவடி கனரக வாகன தொழிற்சாலை சார்பில், ஆவடி ‘ஏ.வி.என்.எல் இன்ஸ்டிடியூட் ஆப் லேர்னிங்’ மையத்தில் பீரங்கிகள் தயாரிக்கப் பயன்படும் உள் நாட்டு உதிரி பாகங்கள் கண்காட்சி நடைபெற்றது. ஏ.வி.என்.எல் நிறுவன தலைவரும் நிர்வாக இயக்குநருமான சஞ்சய் திவிவேதி கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

ஆவடி பகுதியில் உள்ள பள்ளி மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இக்கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டனர். அதன் தொடர்ச்சியாக, ஆவடி கனரக வாகன தொழிற்சாலை சார்பில், உள்நாட்டு உதிரி பாகங்களால் தயாரிக்கப்பட்ட பீரங்கிகளின் செயல் விளக்கக் காட்சி நேற்று ஆவடி கனரக வாகன தொழிற்சாலை வளாகத்தில் தொடங்கியது.

இதில், ஆவடி கனரக வாகன தொழிற்சாலை முதன்மை பொது மேலாளர் ராம்பகத் பங்கேற்று, உள்நாட்டு உதிரி பாகங்களால் தயாரிக்கப்பட்ட பீரங்கிகளின் செயல் விளக்கக் காட்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

SCROLL FOR NEXT