தாம்பரம்: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து சாலையில் நடந்து சென்ற சிறுமி மீது மாடு ஒன்று தாக்கியதில் காயமடைந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பதைபதைப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து, அந்த கால்நடையின் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே தமிழகம் முழுவதும் சாலைகள், தெருக்களில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் உள்ளாட்சி நிர்வாகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் கால்நடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநகரப் பகுதிகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக அலைந்து திரியும் கால் நடைகளை உரிமையாளர்கள் தங்களது சொந்த பொறுப்பில் கொட்டில் அமைத்து பராமரிக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த அறிவிப்புகளுக்கு மாறாக மாநகர பிரதான வீதிகளில் மாடுகள் அலைந்து திரிகின்றன. கால்நடை உரிமையாளர்களால் மாநகராட்சியின் அறிவிப்பினை பொருட்படுத்தாமலும் பொதுமக்களின் நலன் மீது அக்கறை இன்றியும் தொடர்ச்சியாக கால்நடைகள் மாநகரப் பகுதிகளில் சுற்றித்திரி கின்றன. தொடர்ந்து மீறினால் கால்நடைகள் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டு நிரந்தரமாக அரசு அங்கீகாரம் பெற்ற கோசாலையில் ஒப்படைக்கப்படுவதுடன் திரும்ப வழங்கப்பட மாட்டாது.
மேலும் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு பராமரிக்கும் செலவினத்துடன் அபராதத் தொகையாக ரூ.2,000 விதிக்கப்படும் என கூட்டத்தில் ஆணையர் அழகு மீனா எச்சரித்தார்.