சென்னை: ஊழல் மற்றும் பொருளாதார குற்றங்களைத் தடுக்கும் வகையில் தற்போதுள்ள சட்டங்களைக் கடுமையாக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யக் கோரி வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர் தனது மெய்தன்மையை நிரூபிக்கும் வகையில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்ய உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ``நாட்டில் ஊழல்மற்றும் பொருளாதாரக் குற்றங்களைத் தடுக்கும் வகையில் சட்டங்களைக் கடுமையாக்கும் வகையில், சட்டத்திருத்தம் செய்ய மத்திய, மாநில சட்ட ஆணையங்களுக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், இருக்கும் சட்டங்களில் என்ன திருத்தம் கொண்டுவர வேண்டும் என நினைக்கிறீர்கள், தற்போதைய சட்டம் வலுவாக இல்லை என எப்படி கூறுகிறீர்கள் என மனுதாரர் தரப்புக்குக் கேள்வி எழுப்பினர்.
பின்னர் இந்த வழக்கில் பொதுநலன் இருப்பதாகத் தெரியவில்லை. விளம்பர நோக்குடன் தொடரப்பட்டுள்ளதாகவே தெரிகிறது என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ``மனுதாரர் தனது மெய்தன்மையை நிரூபிக்கும் வகையில்ரூ.1 லட்சத்தை 2 வாரத்தில் உயர் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்துள்ளனர்.