குட்கா முறைகேடு தொடர்பாக 8 பேருக்கு எதிராக விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்டகுட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தொடர்பாககுட்கா குடோன் உரிமையாளர்களான மாதவ ராவ், சீனிவாச ராவ்,உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது சிபிஐ ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
முன்னாள் அமைச்சர்கள்: இந்நிலையில், இதுதொடர்பாக எழுந்த சர்ச்சை காரணமாக குட்காமுறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக கடந்த 2022 நவம்பரில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.அதில் பல்வேறு தவறுகள் இருந்ததால், அதை திருத்தம் செய்து முழுமையான குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிபதிமலர் வாலண்டினா உத்தரவிட்டிருந் தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் முன் அனுமதிக்காக காத்திருப்பதாக ஒவ்வொரு முறையும் வழக்கு விசாரணையின்போது சிபிஐ தகவல் தெரிவித்து வந்தது.
ஆக.16-க்கு தள்ளிவைப்பு: இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி மலர் வாலண்டினா முன்பாகநேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில்8 பேருக்கு எதிராக விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக கூறி சிபிஐ அதிகாரிகள் சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதையடுத்து வழக்கு விசாரணையை ஆக.16-ம் தேதிக்குதள்ளி வைத்து நீதிபதி உத்தர விட்டுள்ளார்.