விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நேற்று நடைபயணம் மேற்கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. 
தமிழகம்

மோடியை மீண்டும் பிரதமராக்க 40 எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டும் - பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சாத்தூர்: இந்தியாவில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். 400 எம்.பி.க்கள் வெற்றிபெற, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 40 எம்.பி.க்களை அனுப்ப வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று நடைபயணம் மேற்கொண்டார். படந்தால் பகுதியில் தொடங்கி, மதுரைமுக்கு ரோடு, பழைய பேருந்துநிலையம் வழியாக முக்குராந்தல் பகுதியை அடைந்த அண்ணாமலை, வழியெங்கும் கட்சியினர் மற்றும் பொதுமக்களை சந்தித்துப் பேசினார். முக்குராந்தல் பகுதியில் அவர் பேசியதாவது:

முத்ரா கடன் திட்டத்தின் கீழ்தமிழகத்துக்கு ரூ.2 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் ஒரு கோடி பேர் தொழில்முனைவோராக மாறி உள்ளனர்.

சாத்தூர் சேவுக்கு புவிசார் குறியீடு விரைவில் கிடைக்கும். லைட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு, சாத்தூர் தீப்பெட்டிக்கு மவுசு கூடியுள்ளது. காமராஜர் பள்ளிகளைத் திறந்தார்.பிரதமர் மோடி உயர்கல்வி நிறுவனங்களைத் தொடங்கிவருகிறார். பிரதமர் `படி, படி' என்கிறார். ஆனால், தமிழக முதல்வர் டாஸ்மாக் கடைகளைத் திறந்து `குடி, குடி' என்கிறார். தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்துக்காக மத்திய அரசு ரூ.7.53 லட்சம் கோடி நலத் திட்டங்களை வழங்கி உள்ளது. ஆனால், தமிழகம் கடன்கார மாநிலமாக உள்ளது. மதுவுக்கு அடிமையாகி மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்கிறார்கள். அப்படியானால், படித்து முடித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு என்னாவது?

இதுபோன்ற குடிக்கு அடிமையாக்கும் ஆட்சியில் இருந்து மக்கள் விடுதலை பெற வேண்டும். சாமானியர் காமராஜரின் ஆட்சியை நாடு போற்றியது. அதேபோல, 2024-ல் சாமானிய மனிதர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். பாஜக கூட்டணி 400 எம்.பி.க்கள் வெற்றிபெற, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 40 எம்.பி.க்களை நாம் அனுப்பிவைக்க வேண்டும்.

இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

SCROLL FOR NEXT