நீலகிரி மாவட்டத்துக்கு இன்று வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முத்தநாடு மந்தில் பார்வையிட உள்ள தோடர் பழங்குடியின மக்களின் கோயில். 
தமிழகம்

ராகுல் காந்தி இன்று உதகை வருகை - தோடர் பழங்குடியினருடன் கலந்துரையாடுகிறார்

செய்திப்பிரிவு

உதகை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி, உதகை அருகேயுள்ள முத்தநாடு மந்தில் தோடர் பழங்குடியினருடன் இன்று (ஆக. 12) கலந்துரையாடுகிறார்.

2019 மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்றார் ராகுல்காந்தி. இந்நிலையில், மோடி சமூகத்தினர் குறித்து தவறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனடிப்படையில் ராகுல் எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அவரது தண்டனையை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், ராகுல் எம்.பி. பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வயநாடு எம்.பி. பதவியை அவர் மீண்டும் பெற்றார். பின்னர் மக்களவையில் உரையாற்றினார்.

எம்.பி. பதவியை மீண்டும் பெற்றபின்னர் முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு இன்று ராகுல் காந்தி செல்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் ராகுல் காந்தி, அங்கிருந்து கார் மூலமாக உதகை, கூடலூர் மார்க்கமாக கேரள மாநிலம் வயநாடுக்குச் செல்ல உள்ளார்.

முன்னதாக, உதகை அருகே எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியார் விடுதியில், முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்துப் பேசுகிறார். மேலும், நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் `ஹோம் மேட் சாக்லேட்' குறித்து கேட்டறிகிறார்.

பின்னர் மதிய உணவை முடித்துக்கொண்டு, கூடலூர் செல்லும் வழியில் தோடர் பழங்குடியின மக்கள் வசிக்கும் முத்தநாடு மந்தில்,தோடர் பழங்குடியின மக்களை சந்தித்துப் பேசுகிறார். தொடர்ந்து,அங்குள்ள பழங்குடி மக்களின் கோயிலைப் பார்வையிடுகிறார். பின்னர், சாலைமார்க்கமாக வயநாடு செல்கிறார். ராகுல் வருகையைமுன்னிட்டு, நீலகிரி காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைமேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT