திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
ஆளுநர் ரவி இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் திருவண்ணாமலைக்கு வந்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குபேரலிங்கம் அருகே உள்ள திருமண மண்டபத்தில், சாதுக்கள் மற்றும் மூக்குபொடிசித்தர் ஆசிரமம் அருகே உள்ள விவசாய நிலத்தில் இயற்கை விவசாயிகள் ஆகியோருடன் அவர் கலந்துரையாடினார்.
பின்னர் ரமணர் ஆசிரமம் மற்றும்யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்துக்குச் சென்று, குடும்பத்துடன் வழிபட்டார். இதையடுத்து, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நேற்று காலை குடும்பத்துடன் சென்ற ஆளுநர், மூலவர் சன்னதி, உண்ணாமுலை அம்மன் மற்றும் பாதாள லிங்கத்தை தரிசனம் செய்தார்.
சிறிது தூரம் கிரிவலப் பாதையில் நடந்து சென்ற ஆளுநர், தொடர்ந்து ஜவ்வாதுமலை குனிகாந்தூர் கிராமத்தில் மலைவாழ்மாணவர்கள் மற்றும் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர், காவலூரில் உள்ள வைணுபாப்பு வானாய்வகத்தைப் பார்வையிட்டார். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டைக்கு நேற்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார்.