சென்னை: ‘சிங்கப்பெண்’ சிறப்பு படையை பொதுமக்கள் தொடர்பு கொள்ள, கட்டணமில்லா தொலைபேசி எண்ணை, டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் வெளியிட்டுள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி காவல் உதவி கிடைக்கும் வகையிலும், தமிழக காவல்துறையின் சார்பில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துதல், அவசர சூழ்நிலைகளில் விரைந்து சென்று பாதுகாப்பு வழங்குதல், குற்றங்களை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு, இப்படை தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், அதன் பிரத்யேக உதவி எண்ணாக ‘1091’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி எண், மாநில அவசர கால உதவி எண்ணான ‘112’ உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் தொந்தரவு, குடும்ப வன்முறை, பாலியல் தொந்தரவு, மிரட்டல், பின்தொடர்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க முடியும்.
1091 எண்ணுக்கு வரும் அழைப்புகளை 24 மணி நேரமும் செயல்படும் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள பயிற்சி பெற்ற காவலர்கள் கண்காணிப்பார்கள். புகார்கள் பெறப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், அருகில் உள்ள சிங்கப் பெண் அதிரடிப்படை அல்லது ரோந்து குழுவினருக்கும் தகவல் அனுப்பப்பட்டு, சம்பவ இடத்துக்கு காவலர்கள் விரைந்து செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், தேவையான சட்ட நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படுவதை காவல்துறை தொடர்ந்து கண்காணிக்கும். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பான சூழலில் வாழும் வகையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மற்றும் 1091 உதவி எண் மூலம் காவல்துறை தனது பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அவசர உதவி தேவைப்படும் நேரங்களில் தயக்கமின்றி 1091 எண்ணை தொடர்பு கொள்ளுமாறு, பொதுமக்களுக்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜி பவானீஸ்வரி அறிவுறுத்தி உள்ளனர்.