தமிழகம்

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காதலர்கள் மர்ம மரணத்தை விசாரிக்க வேண்டும்: தேனி எஸ்.பி.யிடம் கே.பாலபாரதி மனு

செய்திப்பிரிவு

பெரியகுளம்: மர்மமான முறையில் காதலர்கள் இறந்த சம்பவத்தை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.

பெரியகுளத்தைச் சேர்ந்த காதலர்கள் மாரிமுத்து (22), மகாலட்சுமி (17). இவர்கள் இருவரும் கடந்த 5-ம் தேதி காந்தி நகர் அருகே உள்ள தனியார் மாந்தோப்பில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தனர். இதைத் தொடர்ந்து, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் என, மாரிமுத்துவின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் செல்லக் கண்ணு, கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை ஆகியோர், காதலர்கள் இறந்த இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர், மாரிமுத்துவின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர்.

தொடர்ந்து, தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரேவை சந்தித்து, இந்த வழக்கை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும், மர்ம மரணத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி, இன்று ( வெள்ளிக் கிழமை ) பெரியகுளத்தில் மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று, மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT