விருதுநகர்: நடைபயணத்தின் போது இதுவரை பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக ஆக. 22-ம் தேதிக்கு பின்பு வெள்ளை அறிக்கை வெளியிடுவோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தை நேற்று காலை விருதுநகர் பாண்டியன் நகரிலிருந்து அண்ணாமலை தொடங்கினார். அங்குள்ள டீ கடையில் டீ குடித்த அவர், இளைஞர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அங்கிருந்த ஒரு தட்டச்சு பயிற்சி மையத்துக்குச் சென்று பார்வையிட்டார். பாண்டியன் நகரில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, தலைமை அஞ்சலகம், ராமமூர்த்தி சாலை, விவிஆர் சிலை ரவுண்டானா, மதுரை ரோடு, மீனாம்பிகை பங்களா, பழைய பேருந்து நிலையம், மாரியம்மன் கோயில், தெப்பம் வழியாக எம்.ஜி.ஆர். சிலையை அடைந்தார்.
பின்னர் அண்ணாமலை பேசிய தாவது: விருதுநகர் மாவட்ட பாஜக அலுவலகத்துக்குள் புகுந்து பாரத மாதா சிலையை அகற்ற காவல் துறையைத் தூண்டியது அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரனும், தங்கம் தென்னரசுவும்தான். பாரத மாதா சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும். அதை, இந்த 2 அமைச்சர்களும் தடுத்தால் என்ன நடக்கும் என்பது வரும் மக்களவைத் தேர்தலில் தெரியும்.
முத்துராமலிங்கத்தேவர் மாநில அரசை எதிர்த்து அரசியல் செய்ததால்தான் தென் தமிழகம் முன்னேறவில்லை என்று அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரன் கூறியுள்ளார். தேவரின் கால் நக அழுக்குக்குக்கூட அவர் சமம் கிடையாது. சாத்தூர் ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ள துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை. ஆனால், அவருக்குத்தான் வருவாய், மக்களுக்கு பேரிடர்.
ராகுல் காந்தி இந்தியாவின் பஃபூன். மாணிக்கம் தாகூர் எம்.பி. தமிழகத்தின் பஃபூன். விருதுநகர் மாவட்டத்துக்கு மாநில அரசு கொடுத்ததைவிட மத்திய அரசு கொடுத்த திட்டங்கள் அதிகம். இதை மறுத்தால் வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள். விருதுநகர் மாவட்ட வளர்ச்சிக்கு காரணம் பிரதமர் மோடி மட்டும்தான். இந்த தொகுதியில் பாஜக எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட்டதும் ரூ.50 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை கொண்டு வருவோம்.
செண்பகவல்லி அணையை சீரமைக்க தமிழக அரசு, கேரள அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அணை செயல்பாட்டுக்கு வந்தால் விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு குடிநீர் பிரச்சினை முழுமையாக தீரும். நடைபயணத்தின்போது மக்கள் ஏராளமான புகார் மனுக்களை அளித்து வருகிறார்கள். இதுவரை 5,500 மனுக்கள் வந்துள்ளன.
இதில், 700 மனுக்கள் மத்திய அரசு தொடர்புடையவை. நகராட்சி, ஊராட்சி தொடர்பாக ஏராளமான மனுக்கள் வந்துள்ளன. குறிப்பாக ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ரூ.3,500 லஞ்சம் வாங்கப்படுவதாக புகார் கூறுகிறார்கள். இதுவரை பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக ஆக. 22-ம் தேதிக்கு பின்பு வெள்ளை அறிக்கை வெளியிடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
நடைபயணத்தின்போது முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணண், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.