சென்னை நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியை கனகலட்சுமி, 1-ம் வகுப்பு மாணவர்கள் எளிதாக கணிதம் பயிலும் வகையில் கணக்கு கையேடு ஒன்றை தயாரித்துள்ளார். ரிப்பன் மாளிகை வளாகத்தில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் இந்த கையேடு வெளியிடப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி இந்தக் கையேட்டை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் சைதை துரைசாமி பேசியதாவது: மாநகராட்சி பள்ளி ஆசிரியை ஒருவர், மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த கையேட்டை தயாரித்துள்ளார். அவரது முயற்சிக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆசிரியர்களுக்கு பயிற்றுவிப்பு சார்ந்த பல்வேறு அனுபவங்கள் இருக்கும். அந்த அனுபவத்தின் தொகுப்பை ஆசிரியர்கள் வெளிக்கொணர வேண்டும். அவர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு புதிய கற்பித்தல் முறைகளை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கணக்கு கையேட்டை உருவாக்கிய ஆசிரியை கனகலட்சுமி பேசியதாவது:
நான் கடந்த 2011-ல் 1-ம் வகுப்பு மாணவர்கள் 45 நாட்களில் எளிமையாக தமிழ் படிக்கும் வகையில் கையேடு ஒன்றை தயாரித்து வெளியிட்டேன். இப்போது 1-ம் வகுப்பு மாணவர்கள் எளிமையாக கணக்குகளை தெரிந்துகொள்ள இந்த கையேட்டை தயாரித்துள்ளேன். அடுத்ததாக 1-ம் வகுப்பு மாணர்கள் ஆங்கிலம் பேசும் வகையில் கையேடு ஒன்றை தயாரிக்கவுள்ளேன்.