விருதுநகர்: "என் மண், என் மக்கள்" நடைபயணத்தை ஜூலை 28-ம் தேதி ராமேசுவரத்தில் தொடங்கிய அண்ணாமலை, ஆக.7-ம் தேதி நடைபயணத்தை தள்ளிவைத்துவிட்டு டெல்லி சென்றிருந்தார். 3 நாட்களுக்குப் பின் நேற்று காலை விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தனது பயணத்தை மீண்டும் தொடங்கினார். அப்போது கூடை பின்னும் தொழிலாளர்கள், இசைக் கலைஞர்களைச் சந்தித்தார்.
காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே `அண்ணாமலை' என்ற உணவகத்துக்குள் திடீரென நுழைந்த அவர், அதன் உரிமையாளரைச் சந்தித்துப் பேசியதோடு சற்று நேரம் அங்கு ஓய்வெடுத்தார். பிறகு பேருந்து நிலையத்தில் வேனில் நின்றபடி மக்களிடையே பேசியது: பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மாவட்டம் இது. 12 தடுப்பணைகள் கட்டி லட்சக்கணக்கான விவசாயிகளை வாழ வைத்தார்.
நாடு முழுவதும் 27 மாநிலங்களில் 112 பின் தங்கிய மாவட்டங்களை மத்திய அரசு கண்டறிந்துள்ளது. இவற்றில் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களும் அடங்கும். 2018-ல் நிதி ஆயோக் மூலம் விருதுநகர் மாவட்டம் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு கொடுக்கும் நிதியைப் பெற்று மத்திய அரசு செய்யும் வேலைகளுக்கும், திட்டங்களுக்கும் ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் திராவிட மாடல் அரசு. இவ்வாறு அவர் பேசினார்.
விருதுநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் அனுமதியின்றி பாரதமாதா சிலை வைக்கப்பட்டதாகக் கூறி அதிகாரிகள் அந்தச் சிலையை கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு அப்புறப்படுத்தினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அண்ணாமலை தனது கையில் கருப்பு பட்டை அணிந்திருந்தார்.
தொடர்ந்து திருச்சுழி சென்ற அண்ணாமலை, ரமண மகரிஷி இல்லத்தைப் பார்வையிட்டார். நேற்று மாலை அருப்புக்கோட்டையில் நடைபயணம் மேற்கொண்டார்.