தமிழகம்

நீர்மட்டம் தொடர்ந்து சரிவதால் மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு - கவலையில் காவிரி டெல்டா விவசாயிகள்

செய்திப்பிரிவு

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால், டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 7,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் குறுவை சாகுபடிக்கு நீர் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்றைய தினம் நீர்மட்டம் 103 அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 867 கனஅடியாகவும் இருந்தது. விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. பின்னர், கடந்த மாதம் 30-ம் தேதி அதிகபட்சமாக 14 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

தற்போது பருவமழைக் காலம் தொடங்கிய நிலையில், பெரிய அளவில் மழை பெய்யவில்லை. கேரளா, கர்நாடகாவில் மழை பெய்தாலும் கர்நாடகா அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்படாமல் உள்ளது. மேலும், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக, கர்நாடக அணைகள் நிரம்பும் நிலையில் இருந்ததால் குறைந்தளவே உபரிநீர் திறக்கப்பட்டது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 4,107 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இரவு 8 மணிக்கு 5,065 என அதிகரித்து, நேற்று காலை 4,654 கனஅடியாக குறைந்தது.

நீர் திறப்பை விட, நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போது, அணையின் நீர்மட்டம் 56.39 அடியாகவும், நீர் இருப்பு 22.07 டிஎம்சியாகவும் உள்ளது.

குடிநீர், மீன் வளத்துக்காக 9 டிஎம்சி வரை மட்டுமே நீர் தேக்க முடியும். அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவதால், டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடியிலிருந்து 7,500 கனஅடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர், டெல்டா மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களுக்கு செல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக, பருவமழை பெய்யாததாலும், அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் முழுமையாக கிடைக்காததாலும் வெயிலின் தாக்கத்தாலும் குறுவை சாகுபடி பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

தற்போது, அணையின் நீர்மட்டம் சரிந்து, நீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது விவசாயிகளை மேலும் கவலையடையச் செய்துள்ளது. கர்நாடக அரசு மாதாந்திர நீர் பங்கீட்டை வழங்கினால் மட்டுமே குறுவை சாகுபடியை ஓரளவுக்கு காப்பாற்ற முடியும் என்பதால், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், மேட்டூர் அணை நீர் இருப்பை பொறுத்து குறுவை சாகுபடிக்கு 15 முதல் 20 நாட்கள் வரை நீர் வழங்க முடியும். தற்போது, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் விரைவில் நடத்தப்படவுள்ளது. இதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெரிய அளவில் பெய்யவில்லை. ஆனால் ஆகஸ்ட் இறுதி வரை மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது, நீர்வரத்து அதிகரிக்கும் என நம்புகிறோம் என்றனர்.

SCROLL FOR NEXT