சென்னை: போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக சென்னையில் போக்குவரத்து போலீஸார் தினமும் சராசரியாக 6 ஆயிரம் வழக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
சென்னையில் விபத்து, விபத்து உயிரிழப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் குறைக்க போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு உயர்த்தப்பட்ட அபராதம் விதிக்கப்பட்டு, அது கண்டிப்புடன் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினாலும், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டினாலும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிக்னல் சந்திப்பில் காத்திருக்கும்போது வாகனங்கள் ஸ்டாப் லைன் கோட்டை தாண்டி நிறுத்தப்பட்டிருந்தால் அதற்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.
நேரடியாகக் களத்தில் நிற்கும் போக்குவரத்து போலீஸார் மட்டும் அல்லாமல், ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களை நிறுவி கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறும் போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிக்கின்றனர். அந்த வகையில் தினமும் சராசரியாக 6 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
விதிமீறல் வாகன உரிமையாளரின் செல்போனுக்கே அபராத ரசீது அனுப்பி வைக்கப்படுகிறது. போக்குவரத்து போலீஸாரின் தொடர் கடும்நடவடிக்கைகளால் 2021-ஐ ஒப்பிடுகையில் 2022-ல் விபத்துகள் 11.84 சதவீதம் குறைந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் விபத்து உயிரிழப்புகளும் 11.52 சதவீதம் குறைந்துள்ளது. இதேபோல் இந்த ஆண்டும் விபத்து மற்றும் விபத்து உயிரிழப்புகள் கணிசமாக குறைந்துள்ளன என போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து: இது ஒருபுறமிருக்க வாகன விதிமீறலில் ஈடுபடுபவர்கள் 3 முறை விதிமீறல் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் போலீஸார் பரிந்துரைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 6 மாத காலத்தில் விதிமீறல்களில் ஈடுபட்ட 30 ஆயிரத்து 383 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், அபராதம் செலுத்தாத வாகன உரிமையாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் மூலம் போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அபராத வசூலில் குறி: போக்குவரத்து போலீஸாரின் நடவடிக்கையால் விபத்துகள் குறைந்தாலும், போலீஸார் அபராத வசூலிலேயே குறியாக தினமும் செயல்படுவதாகவும், இதனால், வாகன ஓட்டிகளுக்கு அதிகளவில் பணம் இழப்பும், மன உளைச்சலும் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் கவனம் செலுத்தி, மறைந்து நின்றவாறு பாய்ந்து சென்று மடக்கிப் பிடிப்பது, வாகன ஓட்டிகளை சூழ்ந்து கொண்டு அச்சுறுத்துவது உள்ளிட்ட செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.