சென்னை: தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ ரூ.80, மற்ற பகுதிகளில் ரூ.100 என விலை குறைந்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக ஏற்பட்ட வானிலை மாற்றம், ஜூன் மாத கடும் வெப்பம், ஜூலை மாத கனமழை போன்ற காரணங்களால் தக்காளி விளைச்சல் வெகுவாக குறைந்தது.
வரத்து சரிவால் சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் கிலோ ரூ.160 வரையும், சில்லறை விலையில் ரூ.220 வரையும் கடுமையாக உயர்ந்தது.
இதனால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் தக்காளி வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். தக்காளி இல்லாமல்உணவு சமைக்கும் நிலைக்கு இல்லத்தரசிகள் தள்ளப்பட்டனர். விலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகள், நியாயவிலை கடைகளில் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்கப்பட்டது.
கடந்த 15 நாட்களாக மழை குறைந்துள்ள நிலையில், தற்போது கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை படிப்படியாக குறைந்து, நேற்று கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்டது. மற்ற பகுதிகளில் கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது.
இதுகுறித்து கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்க தலைவர் எம்.தியாகராஜன் கூறும்போது, ‘‘வரத்து அதிகரித்திருப்பதால் தக்காளி விலை குறையத் தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் மேலும் விலை குறையும் எனஎதிர்பார்க்கிறோம்’’ என்றார்.