தமிழகம்

மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக 2 மேம்பாலங்களை இடிக்க முடிவு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ.தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒன்று மாதவரம் - சிறுசேரி சிப்காட் வழித்தடம் (45.4 கி.மீ.). இதில் 26.7 கி.மீ. சுரங்கப்பாதை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் பசுமைவழிசாலையில் இருந்து அடையாறு ஆற்றைக் கடந்து, அடையாறுபணிமனை நோக்கி சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது.

இதற்காக, சென்னை அடையாறு சந்திப்பில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட உள்ளது. அதேபோல், ராயப்பேட்டை சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சாலை மேம்பாலத்தின் ஒருபகுதியும் இடிக்கப்படவுள்ளது. மெட்ரோ பணிகள்முடிந்தவுடன் இந்த 2 மேம்பாலங்களும் மீண்டும் கட்டப்படும்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: அடையாறு சந்திப்பு பாலம்இடிக்கும் பணிகளை தொடங்குவதற்கு முன்பு, போக்குவரத்து பாதிக்காத வகையில், தற்போதுள்ள பாலத்தை ஒட்டி அடுத்த ஆண்டு ஆகஸ்ட்டில் புதிய இருவழி மேம்பாலம் கட்டப்படும். இந்த இருவழிப்பாதை மேம்பாலம் கட்டி முடித்ததும், தற்போது இருக்கும் பாலம் இடிக்கப்படும்.

ராதாகிருஷ்ணன் சாலை - ராயப்பேட்டை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தில் 50 சதவீதம் அளவுக்கு ஒரு பகுதிமட்டும் இடிக்கப்படவுள்ளது. இப்பணி டிசம்பரில் தொடங்கும்.அடையாறு மேம்பாலத்தின் ஒரு பகுதியை அடுத்த ஆண்டு செப்டம்பரில் இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மெட்ரோ பணி முடிவடைந்தவுடன், அடையாறு மேம்பாலம் 2027-ம் ஆண்டு அக்டோபரிலும், ராதாகிருஷ்ணன் சாலை மேம்பாலம் 2028 மார்ச் மாதத்திலும் மீண்டும் கட்டப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT