தமிழகம்

கம்பன் விழா சென்னையில் நாளை தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கம்பன் கழகம் சார்பில், 49-வது கம்பன் விழா மயிலாப்பூரில் நாளை (ஆக.11) தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக, சென்னையில் கம்பன் கழக துணைத் தலைவர் நல்லி குப்புசாமி, இணைச் செயலாளர் சாரதா நம்பி ஆரூரன், பொருளாளர் மு.தருமராசன் ஆகியோர்செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழை வளர்க்கவும், தமிழரின் பண்பாட்டை விளக்கவும் நமக்குக் கிடைத்த இலக்கியம் கம்பராமாயணம்.

தூய தமிழில் பாத்திரங்களுக்குப் பெயர் சூட்டி தனித்தமிழுக்குப் பெருமை சேர்த்த கம்பராமாயணப் பாடல்களையும் கருத்துகளையும் மக்களிடம் விளக்கும் விழாகம்பன் விழா. அந்த வகையில், சென்னை கம்பன் கழகம் சார்பில், 49-ம் ஆண்டு கம்பன் விழா மயிலாப்பூர் ஏவிஎம் கல்யாண மண்டபத்தில் ஆக.11 முதல் ஆக.13-ம் தேதி வரை3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

கம்பன் விழாவின் முதல் நாளான 11-ம் தேதி மாலை தொடங்கும் விழாவுக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமை ஏற்கிறார். கலை, இலக்கியத் துறைகளில் புகழுடன் விளங்கும் 16 பேருக்குப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரை சென்னைக்குவரவழைத்து, திருக்குறள், சிலப்பதிகாரம், சீறாப்புராணம், கம்பராமாயணம், பெரிய புராணம், சீவகசிந்தாமணி ஆகிய 6 இலக்கியங்களில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, ஒப்பித்தல் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு இந்த விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

இந்த ஆண்டு கம்பன் விழா கம்பனின் மானுட மேன்மைகள் என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும். வரும் 12-ம்தேதி காலையில் தனியுரை, நால்வர் உலா, கவியரங்கமும் மாலையில் நயவுரை, மகளிர் சோலைஎன்ற நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. வரும் 13-ம் தேதி காலையில் இயலுரை, இன்னுரை, வழக்காடு மன்றம், மாலையில் எழிலுரை, பட்டிமன்றம் உட்பட பல நிகழ்வுகளும் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT