தமிழகம்

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் மீது போக்குவரத்து கழகங்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்: தொழிலாளர் நலத் துறை அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் மீது போக்குவரத்துக் கழகங்கள் உரிய பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என தொழிலாளர் நலத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டுநர்களை நியமிப்பதற்கு எதிராக, சிஐடியு வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியது.

இது தொடர்பாக கடந்த மாதம் 18-ம்தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, போக்குவரத்துக் கழகங்கள் தரப்பில் அதிகாரிகள் யாருமே பங்கேற்கவில்லை. இதையடுத்து, ஆக. 9-ம் தேதிபேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னையில் உள்ள தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தொழிலாளர் தனித் துணை ஆணையர் எல்.ரமேஷ், 8 போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகள், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத் தலைவர் அ.சவுந்தரராஜன், பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் மற்றும் ஏஐடியுசி, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், எம்எல்எஃப், எச்எம்எஸ் உள்ளிட்ட 8 சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அப்போது, நிர்வாகங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "6 போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கவில்லை. இரு போக்குவரத்துக் கழகங்களில் நிரந்தரப் பணியாளர்களை நியமித்த பிறகு, ஒப்பந்தப் பணியாளர்கள் நிறுத்தப்படுவர். வாரிசு அடிப்படையிலான நியமன பணிகளும் நடைபெறுகின்றன. டிசிசி பணியாளர்களை நியமிக்க அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.

தொழிற்சங்கத்தினர் கூறும்போது, “முந்தைய பேச்சுவார்த்தையில் காலி பணியிட விவரங்களை முழுமையாக தெரிவிக்க அறிவுறுத்தியபோதும், காலி பணியிடம், வாரிசு நியமனம் தொடர்பாக எந்த விவரமும் பதில் மனுவில் இல்லை. டிசிசி பணியாளர் நியமனத்தில், மத்திய, மாநில சட்ட வரையறைகள் இல்லை. காலிபணியிடங்களில் 5 சதவீதம் கூட நிரப்ப நடவடிக்கை இல்லை. 5 சதவீதத்துக்கு மேல்வாரிசு நியமனம் கூடாது என்னும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஓட்டுநர், நடத்துநர் தவிர, இதர பணியிடங்களுக்கும் வாரிசு அடிப்படையில் பணிநியமனம் செய்ய வேண்டும். ஓய்வூதியர்கள் பிரச்சினையில் முன்னேற்றம் இல்லை” என்றனர்.

தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் கூறும்போது, “பணிநிலைகளில் மாற்றம்செய்யக் கூடாது என்ற விதியை போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ந்து மீறுகின்றன. வரும் 30-ம் தேதி நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில், எங்களது அறிவுறுத்தலை செயல்படுத்தும் நிலையில் இருக்கும் நிர்வாக இயக்குநர்கள் கட்டாயம் பங்கேற்ற வேண்டும். தொழிற்சங்கத்தினருக்கு சரியான முறையில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்றனர்.

தனி விசாரணை: இதற்கிடையில், ஒப்பந்த சரத்துகளை அமலாக்க மறுக்கும் மேலாண் இயக்குநர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை கோரும் சிஐடியு-வின் மனு மீதான முதல் விசாரணை நேற்று தனியாக நடைபெற்றது. அதில், ஓய்வூதியர்களுக்கு பணப்பலன், அகவிலைப்படி உயர்வு வழங்க மறுப்பது, சொற்ப அளவில் கரோனா நிவாரண நிதி வழங்கியிருப்பது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு நிர்வாகங்களுக்கு, தொழிலாளர் நலத் துறை அறிவுறுத்தியது.

SCROLL FOR NEXT