தமிழகம்

6 வழி சாலைக்காக அக்கப்போர் - ஈசிஆரில் வெட்டப்படும் பசுமை மரங்கள்!

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள மரங்கள் இரவோடு இரவாக வெட்டி சாய்க்கப்பட்டு வருவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மரங்களை வெட்டாமல் வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சென்னையின் மிக முக்கிய சாலைகளில் ஈசிஆர் எனப்படும் கிழக்கு கடற்கரைச் சாலையும் ஒன்று. 4 வழிச் சாலையாக உள்ள இச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற அரசு முடிவு செய்து அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக திருவான்மியூரில் இருந்து அக்கரை வரையிலான சுமார் 10.5 கி.மீட்டர் தூரத்துக்கு ஆக்கிரமிப்புகள் முழு வேகத்தில் அகற்றப்பட்டு வருகின்றன. அத்தோடு அந்த பகுதிகளில் மழை நீர்வடிகால்வாய்களும் உடனுக்குடன் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு வரவேற்பு இருந்தாலும், அதிகாரிகள் சாலையோரம் பல ஆண்டுகளாக நிழல் தந்து கொண்டிருந்த மரங்களை இரவோடு இரவாக வெட்டி அப்புறப்படுத்தி வருவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவான்மியூரில் இருந்து பாலவாக்கம் வரையில் உள்ள பல மரங்கள் இரவோடு இரவாக வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. மேலும், வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளன. பாலவாக்கத்திலிருந்து ஈஞ்சம்பாக்கம் வரையில் சாலையோரம் உள்ள ஏராளமான மரங்கள் எப்போது வேண்டுமானாலும் வெட்டுப்படலாம் என்ற அபாயம் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் நிற்கும் மரங்களை வெட்டி சாய்க்காமல், அதன் கிளைகளை அகற்றிவிட்டு மரத்தை வேரோடு பிடுங்கி பாதுகாப்பாக மாற்று இடத்தில் நட வேண்டும்என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டி, மகேஷ் குமார் என்பவர் கூறும்போது, ‘தினமும் ஈசிஆர் வழியாக செல்கிறேன். நேற்று இரவுவரை நிழல் தந்து கொண்டிருந்த மரங்கள் இரவோடு இரவாக வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு வெயில் காலங்களில் இவைகள் இளைப்பாறுதல் கொடுத்து வந்தன. ஆனால், அவைகள் கண்முன்னே வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

சமூக நல ஆர்வலர்கள் கூறும்போது, ‘மெரினா கடற்கரை ஓரம் மெட்ரோ ரயிலுக்கான வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதிகளில் உள்ள மரங்கள் கிளைகள் அகற்றப்பட்டு மெரினா காமராஜர் சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரி வளாகம், விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் நடப்பட்டு, தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், ஈசிஆரில் உள்ள மரங்களையும் வெட்டாமல் பிடுங்கிமாற்று இடத்தில் நடவேண்டும்’ என்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, உரிய அனுமதி பெற்றே மரங்களை வெட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி, மரங்கள் வெட்டப்பட்டுள்ளதா என விசாரணை நடக்கிறது என்றனர். புயல்களை தாண்டி நிலைத்து நின்று மழை, வெயில் காலங்களில் பொது மக்களுக்கு நிழல் கொடுத்த மரங்களை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் வெட்டாமல் அதை பாதுகாப்பாக வேறு இடத்துக்கு அப்புறப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து மக்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

SCROLL FOR NEXT