திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 3 மாதத்தில் விசாரணையை முடிக்குமாறும் நீதிமன்றம் சிபிஐ-க்கு அறிவுறுத்தியுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 29.3.2012-ல் திருச்சி பாலக்கரையில் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொலை நடைபெற்று 5 ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இதையடுத்து ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அவரது மனைவி லதா கடந்த 2014 டிசம்பரில் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு பல்வேறு நீதிபதிகளிடம் இதுவரை 20 முறை விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி போலீஸார் ஒவ்வொரு முறையும் விசாரணை தொடர்பாக ரகசிய அறிக்கையை தாக்கல் செய்து, குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம், விரைவில் கைது செய்துவிடுவோம், கொலை குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளது என பல்வேறு காரணங்களை கூறி அவகாசம் பெற்றனர். இந்த வழக்கில் சிபிஐடி போலீஸார் இதுவரை 12 ரகசிய அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பஷீர் அகமது முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதிடும்போது, இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் இரு முறை இறுதி கெடு விதித்தது. அதன் பிறகும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை.
சிபிஐயில் போதிய காவலர்கள் பற்றாக்குறை இருப்பதால், விசாரணையை மாற்ற வேண்டாம் என சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஒரு வழக்கை நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றினால், அந்த வழக்கை விசாரிப்பதற்கு தேவையான காவலர்களையும், கட்டமைப்பு வசதிகளையும் வழங்க நீதிமன்றமே உத்தரவிடலாம். இதனால் சிபிஐக்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்றார்.
அரசு வழக்கறிஞர் கந்தசாமி வாதிடும்போது, ராமஜெயம் கொலைக்கு நூற்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உள்ளன. குடும்ப பிரச்சினை, தொழில்போட்டியில் கூட அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம். வழக்கமாக நண்பர்கள் புடைசூழ நடைபயிற்சிக்கு செல்லும் ராமஜெயம், கொலை நடைபெற்ற அன்று தனியாக நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். விசாரணைக்கு ராமஜெயம் குடும்பத்தினர் ஒத்துழைக்க மறுக்கின்றனர். யாரோ ஒருவரை குற்றவாளியாக்கி வழக்கை முடிக்க நினைக்கவில்லை. உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.
இதற்கு மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆட்சேபம் தெரிவித்தார். அவர் கூறும்போது சிபிசிஐடி போலீஸாருக்கு ராமஜெயத்தின் குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். போலீஸார் கேட்ட அனைத்து ஆவணங்களையும் அளித்துள்ளனர் என்றார்.
விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதி, சிபிசிஐடி போலீஸாரில் ஒவ்வொரு விசாரணை அறிக்கையிலும், முந்தைய அறிக்கையில் கூறப்பட்டிருந்ததை வார்த்தை மாறால் அடுத்த விசாரணையில் அப்படியே குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியாக கூடுதல் அவகாசம் கோரி ஒரு பாரா இணைக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான். விசாரணை அறிக்கைகளை பார்க்கையில் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை என்றார்.
பின்னர். வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (7.11.2017)-ல் விசாரணைக்கு வந்தது. ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி நீதிபதி பஷீர் அகமது உத்தரவிட்டார். 3 மாதத்தில் விசாரணையை முடிக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
அரசு வழக்கறிஞருக்கு கண்டனம்:
வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதாக நீதிபதி அறிவிக்கவிருந்த சூழலில் வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டுமென அரசு தரப்பு வழக்கறிஞர் கோரினார். அப்போது, நீதிபதி அரசு தரப்பு வழக்கறிஞரை கடுமையாக சாடினார். தொடர்ந்து இதேமாதிரி அவகாசம் கேட்பது ஆட்சேபணத்துக்குரியது என்றார்.