புதுச்சேரி: காலி பணியிடங்களை புதுச்சேரி அரசு நிரப்பாததால் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் இரண்டு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தினால் வார்டுகளில் சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நோயாளிகள் காத்திருந்தனர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அரசின் கூட்டணிக் கட்சியான அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி அரசு செவிலிய அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் செவிலிய அதிகாரிகளின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் காலியாக உள்ள செவிலிய அதிகாரி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பதவி மறுசீரமைப்பு செய்ய வேண்டும், புதிய செவிலிய அதிகாரிகள் பணியிடங்களை உருவாக்க வேண்டும், ஒப்பந்த செவிலிய அதிகாரிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலை 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் பணிகளை புறக்கணித்து வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு அரசு செவிலிய அதிகாரிகள் சங்கத் தலைவர் சுனீலா குமாரி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜெரோம் சியாமளா, ஸ்டெல்லா, சந்தான லட்சுமி, அமுத சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் கூறுகையில், “காலி பணியிடங்கள் அதிகரித்துள்ளன. அரசை பலமுறை அறிவுறுத்தியும் நிரப்பவில்லை. அதனால், இரண்டு மணி நேர பணி புறக்கணிப்பு போராட்டத்தை துவக்கியுள்ளோம். அடுத்து வரும் 11-ம் தேதி குழந்தைகள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தவுள்ளோம்" என்றனர்.
இப்போராட்டத்துக்கு ஆளும் அரசின் கூட்டணிக் கட்சியான அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலர் அன்பழகன் போராட்டத்தில் பங்கேற்றார். அவர் கூறுகையில், "சுகாதாரத் துறையில் நீண்ட காலமாக காலியாக உள்ள சுமார் 700-க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களை நிரப்பவில்லை. பணியில் உள்ள செவிலியர்கள் பணி சுமையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் அரசின் தொடர் அலட்சியத்தால் செவிலியர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. மருத்துவ விதிப்படி 5 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் பணி செய்ய வேண்டும். ஆனால், 40 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் தற்போது பணி செய்கின்றனர். 10 ஆண்டுகளாக செவிலியர் எண்ணிக்கை அதிகப்படுத்தவில்லை" என்று குறிப்பிட்டார்.
நோயாளிகள் பாதிப்பு: போராட்டத்தின் காரணமாக அரசு மருத்துவமனையில் பணிகள் பாதிக்கப்பட்டன. நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. காத்திருந்து நோயாளிகள் சிகிச்சை பெற்றனர்.