மதுரை: மதுரையில் இம்மாதம் 20-ம் தேதி நடைபெறும் அதிமுக மாநாட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை வலையங்குளத்தில் ஆகஸ்ட் 20-ல் அதிமுக மாநாடு நடைபெறுகிறது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கிறார். மாநாட்டுக்கு பொதுவான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாங்கள் எதிர்பார்த்ததை விட மாநாட்டுக்கு அதிகளவில் ஆட்கள் வருவார்கள் என தகவல் வந்துள்ளது.
இதனால் மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், மாநாடு நடைபெறும் பகுதியில் போக்குவரத்து சீர் செய்யவும், மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, மதுரையில் ஆகஸ்ட் 20-ல் நடைபெறும் அதிமுக மாநாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும் தேவையான பாதுகாப்பு வழங்குவதை போலீஸார் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.