சென்னை: தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று இயல்பைவிட வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் ஆக.10, 11 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 98.6 டிகிரி முதல் 102.2 டிகிரிபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 35.6 முதல் 39.2 டிகிரி பாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும்.அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளிலும், தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் இன்றும், நாளையும்சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும் இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். இந்நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
7 நகரங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி, 7 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 103 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் 102, ஈரோடு, மதுரை, தஞ்சாவூரில் தலா 101, திருச்சி, வேலூரில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.