தமிழகம்

தமிழகத்துக்கு தரவேண்டிய கிருஷ்ணா நதி நீரில் 8 டிஎம்சியை திறக்க வேண்டும்: ஆந்திர நீர்வளத் துறைக்கு தமிழக அரசு கடிதம்

செய்திப்பிரிவு

சென்னை: கிருஷ்ணா நதிநீரில் தமிழகத்துக்கு முறைப்படி வழங்க வேண்டிய 8 டிஎம்சி நீரை வழங்கும்படி கேட்டு ஆந்திர நீர்வளத்துறைக்கு தமிழக நீர்வளத்துறை கடிதம் எழுதியுள்ளது.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி சென்னையின் குடிநீர் தேவைக்காக ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி, ஜூலை முதல்அக்டோபர் வரை 8 டிஎம்சி என மொத்தம் 12 டிஎம்சி தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஆந்திர அரசுதிறந்துவிட வேண்டும்.

நடப்புநீர் வழங்கும் பருவத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் 1.03 டிஎம்சி நீரை ஆந்திரா விடுவித்துள்ளது. கண்டலேறு அணையில் தற்போது 16.6 டிஎம்சி நீர் மட்டுமேஇருக்கும் நிலையில், தெலங்கானாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையாததால், அங்குள்ள அணைகளில் இருந்து கண்டலேறுவுக்கு வரும் நீரின் அளவு குறைவாகவே உள்ளது.

விநாடிக்கு 39.5 கனஅடி நீர்: இதையடுத்து, ஆந்திராவின் நீர்த்தேவை கருதி, கண்டலேறுவில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீர் குறைக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டில், நேற்று முன்தினம் நிலவரப்படி விநாடிக்கு 39.5 கன அடி நீர் மட்டுமே வந்தது. எனவே, நடப்பு நீர் வழங்கும் காலத்தில், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 8 டிஎம்சி நீரை முறைப்படி திறக்க வலியுறுத்தி, ஆந்திர அரசுக்கு சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் கடிதம் எழுதியுள்ளார்.

SCROLL FOR NEXT