திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற 9-ம் கட்ட அகழாய்வில் 8 கிராம் எடையுள்ள படிக எடைக்கல் கண்டெடுக்கப்பட்டது.
கீழடியில் ஏற்கெனவே 8-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. அதேபோல் கொந்தகை, அகரம், மணலூரிலும் அகழாய்வு நடைபெற்றது. 4 இடங்களிலும் கண்டறியப்பட்ட பல ஆயிரம் தொல் பொருட்கள் கீழடி அகழ் வைப்பகத்தில் வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஏப்.6-ம் தேதி கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணியை காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தற்போது கீழடி, கொந்தகை ஆகிய 2 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை கீழடியில் 9 குழிகள் தோண்டப்பட்டன. இதில் தங்க அணிகலன், சுடுமண் காளை, ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், செப்பு ஊசி என 200-க்கும் மேற்பட்ட தொல்பொருட் கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் 9-வது குழியில் 175 செ.மீ., ஆழத்தில் படிக எடைக் கல் கண்டெடுக்கப்பட்டது.
இது 8 கிராம் எடையும், 1.5 செ.மீ. உயரம், 2 செ.மீ. விட்டம் கொண்டது. மேல்பகுதி, அடிப்பகுதி தட்டையாகவும், கோள வடிவில் பளபளப்பாக ஒளிபுகும் தன்மை யுடன் உள்ளது. மேலும் எடைக் கல்லுடன் சுடுமண் வட்டச் சில்லு கள், இரும்பு ஆணி, கருப்பு, சிவப்பு நிறப் பானை ஓடுகள், சிவப்பு பூச்சு பானை ஓடுகள் கண்டறியப்பட்டன. இத்தகவலை தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.