தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடத்தை திறந்த அமைச்சர் டி.ஜெயக்குமார், மாணவர்களுக்கு பாடம் நடத்தி அசத்தினார்.
சென்னை ராயபுரம் தொகுதி எம்எல்ஏவும், மீன்வளத்துறை அமைச்சருமான டி.ஜெயக்குமார் நேற்று தன் தொகுதிக்கு உட்பட்ட மண்டலம் 5-ல் உள்ள மாநகராட்சி பள்ளிக்குச் சென்றார். அங்கு, தொகுதி நிதி ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள் கொண்ட கட்டிடத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, அங்குள்ள வகுப்பறை ஒன்றில் மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார். மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும். தண்ணீரின் வேதியியல் மூலக்கூறு எவ்வாறு அமைந்துள்ளது என்பவை தொடர்பாக மாணவர்களுக்கு கரும்பலகையில் எழுதி பாடம் நடத்தினார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, ‘‘மாணவர்களுக்கு நமக்கு தெரிந்ததை சொல்லிக்கொடுப்பது நல்லது தானே. ‘நல்லதே நினை, நல்லதே நடக்கும்’ என்பதை தெரிவித்தேன். தண்ணீரின் மூலக்கூறு தொடர்பாக விவரித்தேன்.
நம் சென்னை 375 ஆண்டு வரலாறு கொண்டது. சென்னையின் வரலாற்றை புனித ஜார்ஜ் கோட்டையின் மூலம் அறியலாம். புனித ஜார்ஜ் கோட்டை கடந்த 1640-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதை கட்டியவர் பிரான்சிஸ் டே என்பதை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தேன்’’ என்றார்.