கடந்த 2005-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் 91 பேர் வருவாய் கோட்டாட்சியர், டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிகவரி அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
மெயின் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் தவறு நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் 8 பேர் நீங்கலாக 83 பேரின் நியமனத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு அளித்தது. டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு 9 ஆண்டுகள் அரசுப் பணியை முடித்துவிட்ட நிலையில், 83 உயர் அதிகாரிகளின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
அவசர ஆலோசனை
அவர்களில் துணை ஆட்சியராக தேர்வு செய்யப்பட்டவர்கள் தற்போது ஐஏஎஸ் அதிகாரியாகவும் டிஎஸ்பிக்கள், ஐபிஎஸ் அதிகாரியாகவும் பதவி உயர்வு பெறக்கூடிய நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் 83 பேரின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகள் திங்கள்கிழமை மாலை அவசரக் கூட்டம் நடத்தினர். இதில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்தும் சட்ட ரீதியாக அடுத்து என்ன செய்யலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பிரச்சினை தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் சிலர் செவ்வாய்க்கிழமை டெல்லி சென்றிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.
சீராய்வு மனு தாக்கல்?
இதற்கிடையே, உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட 83 உயர் அதிகாரிகளும் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர்களின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர்.