கார்ட்டூனிஸ்டுகள், சமூகப் போராளிகளைக் கைது செய்வது, மாறுபட்ட கருத்து கொண்ட மக்கள் மீது அடக்குமுறையைக் கையாள்வது போன்றவை பயம் கொள்ள வைக்கின்றன என ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
கந்துவட்டிக் கொடுமையை விமர்சித்து கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா நவம்பர் 5-ம் தேதி குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு பலரும் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள்.
கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கார்ட்டூனிஸ்டுகள், சமூகப் போராளிகளைக் கைது செய்வது, மாறுபட்ட கருத்து கொண்ட மக்கள் மீது அடக்குமுறையைக் கையாள்வது போன்றவை பயம் கொள்ள வைக்கின்றன. ஏற்கெனவே இந்த அரசியலால் சோர்ந்து போய் இருக்கிறோம். எங்களை மேலும் நொந்து போக வைக்காதீர்கள். திருநெல்வேலியில் நடந்தது வெட்ககரமானது, சோகமயமானது. கார்ட்டூனிஸ்ட் செய்தது தவறென்று நிரூபிக்க வேண்டுமென்றால், அந்தப் பிரச்சினையின் மீது கவனம் செலுத்தி, மீண்டும் அப்படி ஒன்று நிகழாமல் இருக்க வழி செய்யுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.