மேட்டூர்: மேட்டூர் அருகே வேலூர் குடிநீர் நீரேற்று நிலையம் அருகே குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.
மேட்டூர் தொட்டில்பட்டி அருகே வேலூர் குடிநீர் நீரேற்று நிலையம் உள்ளது. இதன் அருகே பி.என்.பட்டி பேரூராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் நகராட்சி குப்பை, சிறு, குறு தொழிற்பேட்டை கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை கொட்டப்பட்டு, குப்பை கிடங்காக மாறியுள்ளது. இந்த குப்பை கிடங்கில் நேற்று மதியம் 12 மணியளவில் திடீரென தீப்பிடித்து, தீ மளமளவென எரிந்தது.
அப்போது, குப்பையில் இருந்து வெளியேறிய புகையால், சாலையில் புகைமூட்டம் போல் காட்சியளித்தது. இதுகுறித்து தகவலறிந்த மேட்டூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து, மேட்டூர் தீயணைப்பு நிலை அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர். ஆனால், தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
இதையடுத்து, தீயை அணைப்பதற்காக, மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. பின்னர், 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஜேசிபி வாகனங்களை கொண்டு 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், தீயில் இருந்து வெளியேறிய புகையால் வாகன ஓட்டிகள், அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், குப்பைகளுக்கு தீ வைத்தது யார்? அல்லது தானாக தீ பிடித்ததா? என கருமலைக்கூடல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.