மதுரை: மதுரை சிபிசிஐடி உதவி ஆணையர் மீதான சொத்துக் குவிப்பு புகார் மனு தொடர்பாக உள்துறைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை - கே.புதூர் பகுதியைச் சேர்ந்த மதுரை வீரன், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'மதுரை சிபிசிஐடி உதவி ஆணையர் ஜஸ்டின் பிரபாகர். இவர் 2006-ல் தல்லாகுளம் காவல் ஆய்வாளராக பணிபுரிந்தபோது என் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் என்னை விடுதலை செய்தது. பின்னர் ஜஸ்டின் பிரபாகர் தூண்டுதல் பேரில் திடீர் நகர் காவல் நிலையத்தில் இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் விடுதலை செய்யப்பட்டேன்.
மதுரை, விருதுநகரில் ஜஸ்டின் பிரபாகர், அவர் பெயரிலும், அவர் குடும்பத்தினர் பெயரிலும் பல இடங்களில் சொத்து வங்கியுள்ளார். அவர் காவலர் நடத்தை விதிகளை மீறி அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். இந்த சொத்துகள் ஊழல் செய்து வாங்கப்பட்டவை. இந்த சொத்துகளை அரசுக்கு தெரிவிக்கவில்லை. எனவே, சட்டவிரோதமாக ஊழல் செய்து வாங்கப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்து, ஜஸ்டின் பிரபாகர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எல். விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, மனு குறித்து தமிழக உள்துறைச் செயலர் மற்றும் டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.