சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரை விசாரிக்க அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றே தொடங்கிய விசாரணை: உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சிறை மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் திங்கள்கிழமை இரவு 8.30 மணி அளவில் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜியிடம் உடனடியாக விசாரணை தொடங்கியது.
அதிகாலையில் எழுப்பி விடபட்டார்: இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். திங்கள்கிழமை முதல்நாள் விசாரணை முடிந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையிலேயே செந்தில் பாலாஜி விசாரணைக்கு தயாரவதற்காக எழுப்பி விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், அவருக்கு காலை உணவு அளிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது நாள் விசாரணை தொடக்கம்: மருத்துவப் பரிசோதனை அறிக்கை வருவதற்குள், அமலாக்கத் துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜியை விசாரணை செய்யும் அறைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. கடந்த 3-ம் தேதி செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைகளில் 60 நிலங்கள் தொடர்பான ஆவணங்களையும், ரூ.22 லட்சம் கணக்கில் காட்டப்படாத பணத்தையும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்திருந்தது.
இரண்டாவது நாள் விசாரணையில், அந்த 60 நிலங்களும் பினாமி பெயர்களில் இருந்துள்ளன. அந்த பினாமிகள் யார்? நிலங்களை வாங்க எப்படி அவர்களுக்கு பணம் கிடைத்தது? என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், விசாரணைக்கு ஆஜராக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
9 மணி நேரம் விசாரணை நடத்த திட்டம்: அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் இன்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், இரவு 7 மணிக்குப் பிறகு மீண்டும் விசாரணையை தொடங்க அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது. ஒரு நாளைக்கு செந்தில் பாலாஜியிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அவரை வரும் ஆக.12 வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.