தமிழகம்

வெயில், மழைக்கு ஒதுங்கிட நிழற்கூடம் இல்லாத பேருந்து நிலையம்: ஆத்தூர் வரும் பயணிகள் தவிப்பு

எஸ்.விஜயகுமார்

சேலம்: சேலம் மாவட்டத்தின் மிகப்பெரிய நகராட்சிகளில் ஒன்று ஆத்தூர். மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஆத்தூர், வியாபாரம், மருத்துவம், கல்வி உள்பட பல துறைகளில் வளர்ச்சி பெற்றிருக்கிறது.

எனவே, கெங்கவல்லி, பெத்தநாயக்கன் பாளையம், ஆத்தூர், தலைவாசல் வட்டங்களைச் சேர்ந்த கிராம மக்கள், அண்டை மாவட்டமான கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த மக்கள் பல ஆயிரம் பேர், பல்வேறு காரணங்களுக்காக தினமும் ஆத்தூர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், ஆத்தூரில் வசிஷ்ட நதியை ஒட்டி, பெரிய அளவிலான பேருந்து நிலையம் உள்ளது. மாவட்டத்தில், சேலத்தை அடுத்து அதிக எண்ணிக்கையில் பேருந்துகளும் பயணிகளும் வந்து செல்லக்கூடிய இடமாக, ஆத்தூர் பேருந்து நிலையம் இருக்கிறது. ஆனால், இங்கு பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதி இல்லை என்று சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறியது: ஆத்தூரை தலைமை இடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. ஆத்தூருடன், நரசிங்கபுரம் நகராட்சியும் ஒன்றிணைந்து, மாநகராட்சியாக உருவாகும் அளவுக்கு வளர்ச்சியடைந்து விட்டன. எனவே, பல்வேறு தேவைகள், காரணங்களுக்காக, மக்கள் ஏராளமானோர் தினமும் ஆத்தூர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், ஆத்தூர் பேருந்து நிலையத்தை நவீனப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளே கேள்விக்குறியாக இருக்கின்றன. பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லக்கூடிய சாலைகள், குண்டும் குழியுமாகவும், போதிய தெருவிளக்குகள் இல்லாமல், இருண்டும் காணப்படுகின்றன. இதனால், இரவில் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்வதில் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

ஆத்தூரில் இருந்து, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னைக்கு செல்லும் நிலையில், சென்னை பேருந்துகள் நிறுத்துமிடத்தில் பயணிகளுக்கான இருக்கை வசதி, குடிநீர் வசதி போன்றவை இல்லை. இதேபோல், கள்ளக்குறிச்சி பேருந்துகள் நின்று செல்லும் இடமும் பயணிகளுக்கான வசதி இன்றி உள்ளது. பேருந்து நிலைய வளாகத்தில் பெரும்பாலான இடங்கள் ஆக்கிரமிப்பில் தான் உள்ளன.

சேலம் பேருந்துகள் நிற்கும் இடத்தில், பயணிகளுக்கான இருக்கைகள் திறந்தவெளியிலேயே போடப்பட்டுள்ளன. நிழற்கூடம் இல்லாத இடத்தில் போடப்பட்டுள்ள இருக்கைகள், வெயில் நேரத்தில் கடும் வெப்பத்துடன் இருப்பதால், அந்த இருக்கைகளை மக்கள் பயன்படுத்துவதே இல்லை. மேலும், இந்த இருக்கைகளுக்கு அருகிலேயே வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டி, ஈக்கள் மொய்த்தபடி குப்பையுடன் இருப்பது, பயணிகளை அருவெறுப்படைய செய்கிறது.

இதன் காரணமாக, நடைமேடையில் உள்ள கடைகளின் முன்புறம் சற்றே கிடைக்கும் நிழலில், தயங்கியபடி நிற்கும் நிலை உள்ளது. ஆனால், குழந்தைகளுடன் வரும் பெண்கள், வயதானவர்கள், உட்கார வழியின்றி தினமும் தவிக்கும் அவலமும் நீடிக்கிறது. மழைக்காலத்தில் மக்களின் துன்பம் இன்னும் அதிகம். பேருந்து நடைமேடைகளில், பயணிகளுக்கான குடிநீர் வசதி கிடையாது. பேருந்து நிலையத்தில் போதிய தெரு விளக்குகள் இல்லாததால், இரவில், பேருந்து நிலையத்தின் பெரும்பகுதி இருளடைந்து காணப்படுகிறது.

பராமரிக்காத கழிவறைகள்: பேருந்து நிலையத்தின் மூலைகளில் ஆங்காங்கே கட்டண கழிப்பறை உள்ளது. இங்கு கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால், அவை திறந்த வெளி கழிப்பிடம் போல பராமரிப்பின்றி, கதவுகள் உடைந்த நிலையில் உள்ளன. இவற்றை, நகர சுகாதார அலுவலர்கள் ஆய்வு செய்வதே இல்லை என்ற நிலையில் உள்ளன. பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் இருட்டு சந்தில் திறந்தவெளி கழிப்பறை உள்ளது.

இங்கு பராமரிப்பு என்பது முற்றிலும் கிடையாது. ஆனால், கையில் காசு இல்லாதவர்கள், அவரசத்துக்கு திறந்தவெளி கழிப்பிடத்தைப் பயன்படுத்தி, நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். பேருந்து நிலையத்துக்குள் எளிதாக பேருந்துகள் வந்து செல்லும் வகையில், அடிப்படை கட்டமைப்பில் சில மாற்றங்களையும் செய்ய வேண்டும்.

இங்கு நிலவும் பிரச்சினைகளைக் களைந்து, வெளியூர் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு, நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். போதிய இட வசதி இருக்கும் நிலையில், மாவட்ட தலைநகரமாக ஆத்தூர் உருவெடுக்கவுள்ள ஆத்தூர் பேருந்து நிலையத்தை நவீனப் படுத்தி, பயணிகளுக்கு பாதுகாப்பானதாக உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றனர்.

SCROLL FOR NEXT