தமிழகம்

மாற்று சமுதாயத்தில் திருமணம் செய்த குடும்பத்தினருக்கு கோயிலில் வழிபட உரிமை வழங்கி மொடக்குறிச்சி வட்டாட்சியர் உத்தரவு

செய்திப்பிரிவு

ஈரோடு: மொடக்குறிச்சி அருகே மாற்று சமுதாயத்தில் திருமணம் செய்த 70 குடும்பத்தினர் கோயிலில் வழிபாடு செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடையை ரத்து செய்து வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டத்தில் அவல்பூந்துறை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட பெரிய காண்டியம்மன், அண்ணமார் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் கீழ், 27 உப கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் குறிப்பிட்ட சமுதாயத்திலிருந்து வேறு சமுதாயத்தில் திருமண உறவு வைத்துள்ள, 70 குடும்பங்களை ஒதுக்கி வைத்து வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் ஈரோடு ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த மனு தொடர்பாக, மொடக்குறிச்சி வட்டாட்சியர் இளஞ்செழியன் தலைமையில் இரு தரப்பினர் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வட்டாட்சியர் இளஞ்செழியன் பிறப்பித்த உத்தரவு:

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் திருமண உறவு வைத்துள்ள குடும்பத்தினருக்கு, கோயில் வழிபாட்டு உரிமை மறுப்பது தவறான நடைமுறை. இது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். எனவே, பிற சமுதாயத்தில் திருமண உறவு வைத்துள்ள குடும்பங்களில் வரி மற்றும் நன்கொடைகளை கோயில் நிர்வாகத்தினர் பெற்றுக்கொள்ள வேண்டும். மகாசபை கூட்டம், சுப நிகழ்ச்சிகள், அசுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுப்பு ஏதுவும் தெரிவிக்க கூடாது.

மேலும், அவர்களுக்கு சமுதாய வழக்கப்படி சீர் மற்றும் சடங்கு செய்யும் நிகழ்வுகள், குலதெய்வ வெண்கல சிலை வழிபாடு போன்றவற்றில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவிக்க கூடாது. இந்த உத்தரவு தொடர்பாக ஆட்சேபனை இருந்தால், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அல்லது அல்லது உரிய நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT